‘கபாலி’ திரை விமர்சனம்

25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார்.

அப்போது, 43 கேங்க் என்ற கேங்ஸ்டர் கும்பல் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதையும், அதுமட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளை செய்துவருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார். முதலாவதாக 43-வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார்கள். அவனது கும்பலை அடித்து துவம்சம்செய்துவிட்டு, தான் வெளியில் வந்துவிட்டதாக அவனின் பாஸிடம் தெரியப்படுத்துமாறு சொல்லிவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்கிறார்.

அங்கு ‘கபாலி’ பெயரில் போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு கூடம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் போதைக்கு அடிமையான ரித்விகாவும் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த கூடத்துக்கு ஆசிரியராக கலையரசன் இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரஜினி, தனது பெயரில் நல்லது நடப்பது நினைத்து பூரித்து போகிறார். அப்போது மாணவர்களிடையே நடக்கும் உரையாடும் நிகழ்ச்சியில் தான் கேங்ஸ்டராக எப்படி மாறினேன் என்பதை எடுத்துக் கூறுகிறார். இதன்பிறகு பிளாஸ்பேக் விரிகிறது.பிளாஸ்பேக் காட்சியில், ரஜினி ஜெயிலுக்கு போகும்போது, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி ராதிகா ஆப்தே, குண்டு காயத்துடன் கிடப்பதை பார்த்துவிட்டுத்தான் செல்கிறார். இதனால், தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் தனது மனைவி உயிருடன் இருக்கிறாளா? தனது குழந்தை என்னவாயிற்று? என்ற குழப்பத்திலேயே இருக்கிறார். இந்நிலையில், கிஷோரின் கும்பலில் போதை மருந்து சப்ளை செய்துவரும் மைம் கோபியை ரஜினி கொன்றுவிடுகிறார். இதையடுத்து, கிஷோர், இனி ரஜினியால் தனது தொழிலுக்கு இடைஞ்சல் இருக்கும் என்றுகூறி அவரை தீர்த்துக்கட்ட பார்க்கிறார்.

இதன்பின்னர், ரஜினி தனது மனைவியையும் குழந்தையையும் கண்டுபிடித்தாரா? கிஷோரின் அராஜகத்தை அடித்து ஒடுக்கினாரா? என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் மிகப்பெரிய பலமே சூப்பர் ஸ்டார் ரஜினிதான். வழக்கமான மாஸ் காட்சிகள் மட்டுமில்லாது சென்டிமெண்ட் காட்சிகளிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சிறைச்சாலையில் வெளிவரும்போதே இவர் தமிழர்களுக்காக பாடுபட்டவர் என்று தெரியவருகிறது. இவர் படத்தில் பேசும் முதல் வசனமே ‘மகிழ்ச்சி’ என்று சொல்லும்போது நமக்கே மகிழ்ச்சி வருகிறது.

அந்த மாஸ் காட்சியை தொடர்ந்து, லிங்கேஷை அடித்து துவம்சம் செய்து, டீசரில் வரும் டயலாக்கை பேசிவிட்டு, கடைசியில் நக்கலாக ‘கோழிக்கறி’ என்று சொல்லிவிட்டு செல்லும் காட்சிகளில் எல்லாம் மாஸ் காட்டுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் இன்னமும் தன்னுடைய அதே ஸ்டைலில் நடித்து கலக்கியிருக்கிறார். வயதானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல என்ற படையப்பா வசனம்தான் நமக்கு ஞாபகம் வருகிறது. அதேபோல், பள்ளி மாணவர்களிடம் தான் எப்படி கேங்ஸ்டராக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.

ரஜினியின் நண்பராக கூடவே வரும் ஜான் விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவருக்கான வசனங்கள் எல்லாம் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. அதை எதார்த்தமாக செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார். தன்ஷிகாவுக்கு இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம். ஸ்டைலான பெண்ணாகவும் அழகாக இருக்கிறார். இடைவேளைக்கு பிறகு இவரது கதாபாத்திரம் அப்படியே மாறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுக்கும். பிளாஸ் பேக் காட்சியில் வரும் நாசரின் நடிப்பும் அற்புதம்.

கிஷோர் மிரட்டலான வில்லனாக அசத்துகிறார். கலர் கலரான உடையில் ஹைடெக் வில்லனாக தெரிந்தாலும், லோக்கல் ரவுடிபோல்தான் நமக்கு தெரிகிறார். லிங்கேஷ், ரஜினிக்கு இணையாக அவருக்கு எதிரில் அமர்ந்து பேசும் காட்சிகளில் கெத்து காட்டுகிறார். மெட்ராஸ் படத்தில் பார்த்த கலையரசன், இப்படத்தில் அப்படியே நேர் எதிராக வந்து நிற்கிறார். குழந்தைதனமான முகத்தில் எதார்த்தம் கலந்து நடித்திருக்கிறார். தினேஷ், ரஜினிக்கு பாடிகார்டாக வந்திருக்கிறார். படம் முழுக்க ‘ரோபோ’ படத்தில் வரும் சிட்டி போல் படத்தில் ரஜினி செய்யும் கட்டளைகளை செய்துவருகிறார். இருந்தாலும், இறுதிக்காட்சிகளில் தனது நடிப்பால் ரசிகர்களை செண்டிமென்டால் கவர்கிறார்.

சூப்பர் ஸ்டாரின் மனைவியாக வரும் ராதிகா ஆப்தே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வயதான கெட்டப்பிலும், ரஜினியுடன் இவர் செய்யும் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. 25 வருடத்திற்கு பிறகு தனது கணவனை பார்த்து கண்கலங்கி நிற்கும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.

படத்தில் 43 கேங்கின் தலைவராக வரும் மலேசியா நடிகர் வின்ஸ்டன் சா, தோற்றத்திலேயே மிரட்டுகிறார். இவருக்கும் ரஜினிக்கு இணையான மாஸ் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். போதைக்கு அடிமையான பெண்ணாக வரும் ரித்விகாவின் கதாபாத்திரத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர் ரஜினியை எதிர்த்து பேசும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினிக்கு ஏற்ற கதையை உருவாக்கி, அதை தனது பாணியில் உருவாக்கியிருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே எதார்த்தமான வசனங்கள்தான். ஆங்காங்கே, ரஜினி பேசும் வசனங்கள், பஞ்ச் டயலாக்காக இல்லாவிட்டாலும், ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளது. ஆனால், ஒருசில காட்சிகளால் படத்திற்கு தொய்வு இருக்கிறது. ரஞ்சித் இயக்கியிருந்த இரண்டு படங்களும் ரஞ்சித் பெயரைச் சொல்லும்படமாக இருந்தது. ஆனால், ‘கபாலி’ முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டுமே குறிப்பிடும். அந்தளவுக்கு ரஞ்சித்தின் பங்கு இதில் குறைவுதான் என்று சொல்லவேண்டும்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாயிருந்தாலும், திரையில் பார்க்கும்போது அந்த பாடல்களுக்கு ஜீவன் பிறந்திருக்கிறது. பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது. முரளியின் ஒளிப்பதிவு மலேசியாவை அழகாக படம்பிடித்திருக்கிறது. செட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக தெரிகிறது. ரஜினிக்கு அமைத்த மாஸ் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா அழகாக வேலை செய்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கபாலி’ ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.

Share on Google Plus

About Murasu Cinema

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment